பள்ளிக் குழந்தைகளைப் பாலியல்
ரீதியிலான தொல்லைகளிலிருந்து பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு
பள்ளிகளை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.)
அறிவுறுத்தியுள்ளது."பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்
(பி.ஒ.சி.எஸ்.ஒ.) 2012 சட்டத்தை' சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தீவிரமாக
நடைமுறைப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே பாலியல் வேறுபாட்டைக்
களைந்து சமநிலையை உருவாக்கும் வகையிலான கற்பித்தலுக்கு உதவக் கூடிய
ஆசிரியர் கையேடு, வழிகாட்டுதல்களை சி.பி.எஸ்.இ. இப்போது
உருவாக்கியிருக்கிறது.
மேலும், "மனித உரிமைகள், பாலியல் கல்வி' என்ற பிளஸ்-2
வகுப்புக்கான விருப்பப் பாடத் திட்டம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறது.
இதைச் சுற்றறிக்கையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சி.பி.எஸ்.இ.,
அவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், நிர்வாகிகள் உள்பட
அனைத்து ஊழியர்களிடையேயும் இந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும்.
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் மூலம்
மாணவர்களிடையே பாலியல் வேறுபாட்டைக் களைவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த
வேண்டும்.
மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட பாதுகாப்புக் கலைகளை
கற்றுத் தருவது, புகார், ஆலோசனைப் பெட்டிகளை பள்ளிகளில் வைப்பது, பள்ளி
வளாகத்தில் முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகையுடன் கூடிய கண்காணிப்புக்
கேமரா பொருத்துவது என பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள்
குறித்தும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








