பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின்
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்
வலியுறுத்தினார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 9 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2013-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.ஆனால், 18 மாதங்கள் கடந்தும் அவர்களின் கோரிக்கைகளில்
ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. எனவே, பார்வையற்றோர் பள்ளிகளில் காலியாக
உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி கடந்த 5 நாள்களாக பார்வையற்ற
பட்டதாரி சங்கத்தினர் 200-க்கும் அதிகமானோர் உண்ணாவிரதம், சாலை மறியல்
போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சமூகநலத் துறை
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், முதல்வர் ஓ.
பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்,
அவர்களை முதல்வர் சந்திக்கவில்லை.
தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி,
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என
விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் முதல்வர் ஓ.
பன்னீர்செல்வம் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், மனிதநேய மக்கள்
கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோரும்
வலியுறுத்தியுள்ளனர்.








