மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவதில் மட்டுமே கவனம்
செலுத்தாமல் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரி பட்டமளிப்பு விழா
சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தியாகராய செட்டி
கல்வி நிலைய அறக்கட்டளைத் தலைவர் பி.ஆர்.வெங்கடேசுவரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு
பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
முன்பெல்லாம் கல்வி நிலையங்களுக்குச் செல்வோர்களின் எண்ணிக்கை குறைவாகவே
இருந்தது. அவ்வாறு படித்தவர்கள் மிகுந்த அறிவாற்றலைப் பெற்றவர்களாக
இருந்தனர். ஆனால், தற்போது கல்வி நிலையங்களும் அதிகமாகிவிட்டன. இவைகளில்
பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால்,
படித்தவர்களிடம் போதுமான அறிவாற்றல் இல்லை.
இதற்கான காரணம் குறித்து விவேகானந்தர் கூறியபோது, ஆங்கிலேயர்கள் காலத்தில்
அவர்களின் ஆட்சி அதிகாரத்துக்கு உதவுவதற்காக ஊழியர்களுக்கு கல்வியை
அறிமுகம் செய்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தக் கல்வி முறையே
செயல்பாட்டில் உள்ளது. இந்தியா முன்னேற வேண்டுமெனில் நம் நாட்டுக்கு உகந்த
வகையில் கல்விமுறை மாற்றப்பட வேண்டும் என்றார் விவேகானந்தர்.
சமுதாய அக்கறை வேண்டும்: மாணவர்கள் மதிப்பெண்களைப் பெறுவதில் மட்டுமே
கவனம் செலுத்துகின்றனர். ஆனால், மதிப்பெண்களில் காட்டும் அக்கறையை
சமுதாயத்தின் மீதான வளர்ச்சியிலும் காட்ட வேண்டும் என்றார்
ராமசுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர், செயலாளர் டாக்டர் பி.தியாகராயன்,
கல்லூரிக் குழு தலைவர் டாக்டர் எம்.ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் முனைவர்
ரவிச்சந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








