மாணவர்கள் சேர்க்கையில் 25 சதவீத
இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க
அரசு தயங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கூறினார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் ஆட்சியில் 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாயக் கல்வி கொடுக்கும் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.
ஆனால், தனியார் பள்ளிகள் ஏதாவது காரணங்களைக் கூறி இழுத்தடித்து வருகின்றன.
கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் உள்ள மொத்த இடங்கள் ஒரு லட்சத்து 43 ஆயிரம்.
ஆனால், 16,194 இடங்கள்தான் நிரப்பப்பட்டுள்ளன. இதே
ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் 89 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 69
சதவீதமாகவும், கர்நாடகத்தில் 25 சதவீதமாகவும் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 10,758 பள்ளிகளில் 1,392 பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி ஒரே ஒரு மாணவரைத்தான் சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
25 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பள்ளிகள் மீது
நடவடிக்கை எடுப்பதில் தமிழகக் கல்வித் துறைக்கு என்ன தயக்கம் என்று அவர்
கேள்வி எழுப்பியுள்ளார்.








