அடுத்த 5 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சி அடைந்தால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் அப்துல்கலாம்
சென்னை புதுக் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலந்து கொண்டு 432
மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். பட்டம் பெற்றவர்களில் 2 பேர்
பிஎச்.டி. பட்டமும், 63 பேர் எம்.பில் பட்டமும், 96 பேர் முதுகலை பட்டமும்,
271 பேர் இளங்கலை பட்டமும் பெற்றனர்.
விழாவில் அப்துல்கலாம் பட்டமளிப்பு விழா உரையாற்றுகையில் கூறியதாவது:–
ஒவ்வொரு
இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற
கடுமையாக உழைக்கவேண்டும். அறிவை பெற அதை தேடி சென்றடைய வேண்டும். விடா
முயற்சி செய்ய வேண்டும்.
64 கோடி இளைஞர்களை பெற்ற நாடு இந்தியா. எனவே
இளைஞர்கள் மன உறுதியோடு முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.
மாணவர்களே நாட்டுக்கு நன்மை தரக்கூடிய புதுமையானவற்றை கண்டுபிடியுங்கள்.
10 சதவீத வளர்ச்சி
‘இந்தியா 2020’ என்ற திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார
வளர்ச்சியை 10 சதவீதத்திற்கு உயர்த்தி அதை நிலை நிறுத்த வழி வகை செய்யும்
திட்டமாகும். அப்படி செய்யப்படுமானால் மக்களின் வறுமை ஒழியும்.
வேலைவாய்ப்பு பெருகும். கல்வி மற்றும் ஆராய்ச்சி, விவசாயம், மருத்துவம்,
கல்வி, எரிசக்தி, ஆகிய துறைகள் வளர்ச்சி அடையும்.
இந்த லட்சியத்தை
அடைய மத்திய, மாநில அரசுகள் செய்து வரும் முயற்சி போதாது. இளைய சமுதாயமும்
நம்பிக்கையுடன் உழைத்தால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இந்தியா
வளர்ந்த நாடாக மாறும்.
இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
வரவேற்பு
விழாவுக்கு வந்தவர்களை கல்லூரியின் முதல்வர் எஸ்.அப்துல் மாலிக்
வரவேற்றார். கல்லூரி தலைவர் யு.முகமது கலிலுல்லா, செயலாளர் ஏ.முகமது
அஸ்ரப், பொருளாளர் சி.அப்துல் மாலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







