தனியார் பள்ளிக்கூடம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தில், ஒரு தனியார் உயர்நிலை பள்ளிக்கூடம் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய மாணவ-மாணவிகளை ஈடுபடுத்தியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
போலீசில் புகார்
வடகரையைச் சேர்ந்த கண்ணன் (வயது 48), ஹரிதாஸ் (45) ஆகியோர், பள்ளிக்கூட நிர்வாகம் மீதும், ஆசிரியர்கள் பற்றியும் களக்காடு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரில், தங்களுடைய மகன்களை கட்டாயப்படுத்தி, கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வைத்துள்ளனர்.
அது குறித்து பெற்றோரிடம் கூறினால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவோம் என்று மகன்களை மிரட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் மாணவ-மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
8 ஆசிரியர்கள் கைது
இந்த பிரச்சினை தொடர்பாக பள்ளிக்கூட தாளாளரும், ஆசிரியருமான சாலமோன் ஜெபா (41), அவருடைய மனைவியும், தலைமை ஆசிரியையுமான ஜெயக்குமாரி (40), ஆசிரியைகள் சுஜித்ரா என்ற மேரி சுஜித்ரா (34), ஹெலன் அருள் எமிமாள் (56), ஏஞ்சலின் ஸ்டெபிகிராப் (29), ஆக்னஸ் (41), சரோஜா (48), ஏசுவடியான் பொன்னுத்துரை (40) ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்கள் 8 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக இருந்துவரும் ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, வேலம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜாமீனில் விடுவிப்பு
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தாளாளர், ஆசிரியர்கள் என 8 பேரும் கோர்ட்டு உத்தரவின் பேரில், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.








