சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேசிய கீதம் கண்டிப்பாக பாடவேண்டும் என்று
மத்திய கல்வி வாரியத்துக்கு உத்தரவிட கோரிய பொதுநல வழக்கின் விசாரணையை 2
வாரத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ரெயில்வே ஊழியர் என்.செல்வதிருமால் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
தேசிய கீதம்
நம் நாட்டின் தேசிய கீதத்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கும்
விதமாக, அனைத்து பள்ளிகளிலும் காலையில், வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு
தேசிய கீதம் பாடப்படுகிறது. அல்லது இசைக்கப்படுகிறது. ஆனால், மத்திய கல்வி
வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் செயல்படும் சென்னையில் உள்ள தனியார்
பள்ளிகள் தேசிய கீதம் பாடவோ அல்லது இசைப்பதோ கிடையாது.
இதுகுறித்து
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் மண்டல அதிகாரிகளுக்கு கடந்த 2014–ம் ஆண்டு
ஆகஸ்டு 25–ந்தேதி மனு கொடுத்தேன். ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை
எடுக்காமல், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு வழங்கும் பிரிவு உதவி
செயலாளருக்கு, மண்டல அதிகாரி அனுப்பி வைத்து விட்டார்.
நடவடிக்கை இல்லை
இதையடுத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு வழங்கும் பிரிவு உதவி
செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6–ந்தேதி மற்றொரு மனுவை தனியாக
அனுப்பினேன். அதில், அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கண்டிப்பாக
காலையில் தேசிய கீதத்தை மாணவர்கள் பாட வேண்டும். அல்லது இசைக்க வேண்டும்
என்று உத்தரவிடவேண்டும். அதுதொடர்பான விதிகளை கொண்டு வரவேண்டும்’ என்று
கூறியிருந்தேன்.
ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆனால், மத்திய
உள்துறை அமைச்சகம், அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் மீது மாணவர்களுக்கு
மரியாதை ஏற்படும் விதமாக, வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம்
பாடவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து சி.பி.எஸ்.இ. கல்வி
வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தள்ளிவைப்பு
இதனால், பள்ளி மாணவர்கள் ‘வந்தே மாதரம்’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய
சினிமா படப்பாடல் என்று நினைக்கின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு
கண்டிப்பாக தேசிய கீதம் மாணவர்கள் பாடவேண்டும் என்று விதிகளை கொண்டு வர
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த
மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், இந்த வழக்கில் மனுதாரர் குற்றம் சுமத்தும் தனியார் பள்ளிகளை
எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். விசாரணையை 2 வாரத்துக்கு
தள்ளிவைக்கின்றோம்’ என்று உத்தரவிட்டார்கள்.







