தமிழக அரசு சார்பில் சென்னையில் தமிழ் புத்தாண்டு தினம்
கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
தமிழ் புத்தாண்டு
தமிழக அரசு சார்பாக சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விழா சென்னை
பல்கலைக்கழகக் கூட்ட அரங்கில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. இந்த
நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை
தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் முற்றோதல் செய்த பல்வேறு
மாவட்டங்களை சேர்ந்த 36 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுக்கான காசோலைகள்
வழங்கப்பட்டது. பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை,
பேச்சுப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்,
தமிழில் 36 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் படைத்த நூலாசிரியர்கள் மற்றும்
பதிப்பகத்தார்கள் என மொத்தம் 171 பேருக்கு ரூ.28 லட்சத்து 32 ஆயிரம்
மதிப்புள்ள பணப்பரிசுகளை வழங்கி, அமைச்சர் கே.சி.வீரமணி
சிறப்புரையாற்றினார்.
கவியரங்கம்–பட்டிமன்றம்
முன்னதாக, தமிழ்வளர்ச்சி செய்தித்துறைச்செயலாளர் மூ.ராஜாராம்
வரவேற்று பேசினார். முன்னாள் அரசவை கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் ‘தாயே
தமிழே’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கில் கவிஞர்கள்
சினேகன், கவிதாசன், தங்க காமராசு, பா.கிருஷ்ணன், மலர்விழி, சி.ரேகா
மற்றும் கோ.மணிகண்டன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
அதனைத்தொடர்யது
கு.ஞானசம்பந்தன் தலைமையில் ‘நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியில் விஞ்சி
நிற்பது தமிழ் வளர்ச்சியா? தமிழக வளர்ச்சியா?’ எனும் தலைப்பில் பட்டிமன்றம்
நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தில் ‘தமிழ் வளர்ச்சியே’ என்ற தலைப்பில்
கவிஞர் தங்கமூர்த்தி, பேராசிரியர் அர்ச்சனா கார்த்திகேயன், கவிஞர் மலர்விழி
ஆகியோரும், ‘தமிழக வளர்ச்சியே’ என்ற தலைப்பில் கவிஞர் கோவேந்தன்,
பேராசிரியர் விஜயசுந்தரி, பேராசிரியர் விமலா அண்ணாதுரை ஆகியோரும்
பேசினார்கள். தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு. சேகர் நன்றி கூறினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







