கல்வியும்,
வேலை வாய்ப்பும் அனைவருக்கும் கிடைத்தால், சாதி பாகுபாடு தானாகவே ஒழிந்து
விடும் என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் பேசினார்.
கருத்தரங்கு
அகில இந்திய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின்
சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டம்
என்ற தலைப்பில் கருத்தரங்கம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்,
கூட்ட அரங்கத்தில் நடந்தது. இதில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதி
எஸ்.தமிழ்வாணன் பேசியதாவது:–
அம்பேத்கர் யார் என்ற முழு விவரமும்
மக்களுக்கு தெரியவில்லை. அம்பேத்கர் குறிப்பிட்ட ஒரு சாதியின் தலைவர்
இல்லை. அவர் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடியவர், உழைத்தவர். அவர்
அனைவருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு அமைக்கப்படும்
சிலைகள், பாதுகாப்பு கூண்டுக்குள் வைக்கப்படுவதை காணும்போது மனம் வேதனை
அடைகிறது.
சாதி ஒழிந்துவிடும்
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாதிகள் என்று எதுவும் கிடையாது. இந்த
சாதிகள் எல்லாம் அண்மை காலங்களில் வந்தது. இந்த சாதி பாகுபாடுகளை ஒழிக்க
வேண்டும் என்றால், கல்வியும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க
வேண்டும். இவை இரண்டும் கிடைத்து விட்டால், சாதி தானாகவே ஒழிந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த
நிகழ்ச்சியை நடத்திய சங்கத்தின் நிர்வாகிகள் அணுகுண்டு கே.ஆறுமுகம், தலித்
டைகர் சி.பொன்னுசாமி, கே.பாலகிருஷ்ணன், ஏ.கே.பெருமாள் உடையார்,
எஸ்.தேன்மொழி, லூயிசால் ரமேஷ், முஸ்தகீம் ராஜா, டி.ஏ.இந்தியன், ஐகோர்ட்டு
வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், அகில இந்திய
பெண் வக்கீல்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி,
வக்கீல்கள் அன்டோனிசெல்வராஜ், ஏ.கலைச்செல்வன் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







