சான்றிதழ் சரிபார்ப்பு ஆவடியில் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலை (எச்.வி.எப்) உள்ளது. இங்கு டெக்னீசியன் மற்றும் கடைநிலை ஊழியர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் 1–ந் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். அப்போது தேர்வாளர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எழுத்து தேர்வில் 500–க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு ஆவடி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சான்றிதழ் சரிபார்ப்பு அதிகாரி சிவப்பிரகாசம், ஒவ்வொருவரின் சான்றிதழ்களையும் சரிபார்த்துக்கொண்டு இருந்தார்.
ஆள்மாறாட்டம் அப்போது எழுத்து தேர்வின்போது பதிவு செய்யப்பட்ட கைரேகைகளையும், சான்றிதழ் சரிபார்க்க வந்தவர்களின் கைரேகைகளையும் அவர் ஒப்பிட்டு பார்த்தார். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார் (வயது 30), பிரபாத்குமார் (26), சந்தன்குமார் (23) ஆகியோரது கைரேகைகள் தேர்வு எழுதியபோது உள்ள ரேகையுடன் பொருந்தவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி இருப்பது தெரியவந்தது.
3 பேர் கைது இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் சிவப்பிரகாசம் புகார் செய்தார். போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் கங்கைராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சஞ்சீவ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் அங்கு தேர்வு எழுதாமல் ஆவடியில் தேர்வு எழுதியது ஏன்? இவர்களுக்காக தேர்வு எழுதிய 3 பேர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.








