கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள்
கடன் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:பட்டப்
படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால்தான் கல்விக் கடன்
வழங்கும் திட்டம் கடந்த 2001-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால்,
தேவையான கல்விக் கடன் பெறுவது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை ரூ. 61,176 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும்,
இதில் ரூ. 16,380 கோடி கடனுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும்
ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கல்விக் கடன்
பெற்றவர்களின் எண்ணிக்கை 9,56,100 ஆகும்.
தமிழகத்தில் 517 பொறியியல்
கல்லூரிகளும், 1,150 கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும்
சுமார் 8 லட்சம் பேர் பல்வேறு பட்டப் படிப்புகளில் சேருகின்றனர்.கல்விக் கடன் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 1.20 கோடி பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9.56 லட்சம் பேருக்கு மட்டுமே, அதாவது 7.96 சதவீதத்தினருக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன் வழங்கியுள்ளன. இது மிகவும் குறைவு.
எனவே, நடப்பாண்டில், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.







