அறிவு, கலாசாரம் ஆகியவற்றை போதிப்பவர்களாக மட்டுமல்லாமல், மாற்றத்துக்கான
காரணிகளாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா
தெரிவித்தார்.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பாக, சென்னை திருவல்லிக்கேணியில்ரூ.
2 கோடியில் கட்டப்பட்டுள்ள மாஸ்டர் ராமுண்ணி - சு. ஈசுவரன் மாளிகையை
ஆளுநர் ரோசய்யா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்துப் பேசியதாவது:
குழந்தைகள்,
இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல
வேண்டும். சமூகத்தின் தூண்களாக ஆசிரியர்களே திகழ்கிறார்கள்.அறிவு, கலாசாரத்தை மட்டும் போதிப்பவர்களாக இல்லாமல், மாற்றத்துக்கான காரணிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இளைஞர்களிடத்தில் முழுமையான வளர்ச்சியை ஆசிரியர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் தொடர்பான முழுமையான அறிவையும் நல்ல உடல், மன நலத்தையும் பெற்றிருக்க வேண்டும். அறிவை மட்டும் புகட்டாமல், நல்லொழுக்கத்தையும் கல்விமுறை வழங்க வேண்டும். ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது ஆசிரியர்களின் கடமையாகும்.
தற்போது சில ஆசிரியர்கள் நன்னெறியில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதை ஆசிரியர்கள் சமூகம் கட்டுப்படுத்தும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் தலைவர் ராம்பால் சிங், பொதுச் செயலாளர் கமல காந்த் திரிபாதி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் தலைவர் கோ. காமராஜ், பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், பொருளாளர் அ. ஜோசப் சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







