பார்வையற்றோர்கள் பங்கு பெற்ற கார் பந்தயம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் 75–க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கார் பந்தயம்
சென்னை மைலாப்பூர் ‘ரவுண்டு டேபிள்’ மற்றும் ‘லேடிஸ் சர்க்கிள்’
சார்பில் பார்வையற்றவர்களுக்கான கார் பந்தயம் நிகழ்ச்சி ஒன்றை நேற்று
ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல்வேறு
இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த கார் பந்தயம்
சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா ‘டெக் பார்க்’கில் தொடங்கி, சென்னையை
சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று விட்டு மீண்டும் தொடங்கிய இடத்துக்கே
வரும்படியாக வழித்தடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
வழித்தடங்கள்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது. காரணம்,
பார்வையற்றவர்கள் படிப்பதற்கு உதவி புரியும் ‘பிரெய்லி’ முறையில்
வழித்தடங்கள் அச்சிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
புள்ளி பட்டியல்
ஒரு காரில், அதன் உரிமையாளர்களும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி
ஒருவரும் இருப்பார். மொத்தம் 40 முதல் 45 கிலோ மீட்டர் பந்தய தூரம் ஆகும்.
ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்கு பிறகு கண்காணிப்பாளர் ஒருவர் இருப்பார்.
அவரிடம் பந்தயத்தில் பங்குபெறுபவர்கள் கையொப்பம் வாங்கி விட்டு செல்ல
வேண்டும்.
அந்த குறிப்பிட்ட தொலைவுக்கு சரியான நேரத்துக்கு வர
வேண்டும். குறைவான நேரத்தில் வந்தாலோ அல்லது அதிகமான நேரத்தில் வந்தாலோ
அபராத (பெனால்டி) புள்ளிகள் கணக்கிடப்படும். கடைசியில் யார் குறைவான புள்ளி
பட்டியலுடன் பந்தய தூரத்தை அடைகிறார்களோ? அவர்கள் வெற்றி பெற்றவர்களாக
அறிவிக்கப்படுவார்கள்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
இவ்வாறு, நடைபெற்ற பந்தயத்தில் தேனி, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு
மாவட்டங்களில் இருந்து 75–க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
கலந்து கொண்டனர். 7 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை
திரைப்பட நடிகர் வைபவ் ரெட்டி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பந்தய தூரத்தை
குறைந்த புள்ளி பட்டியலுடன் 7 பிரிவுகளில் முதல் 3 இடங்களை
பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல், போட்டியில்
பங்குபெற்ற அனைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு
பரிசுகளும் வழங்கப்பட்டன.
பந்தயத்தில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த
பார்வையற்ற மாற்றுத்திறனாளி உஸ்ரா பேகம் (வயது 60) கூறும்போது, ‘நான் இந்த
போட்டியில் 25 வருடங்களாக பங்கு பெற்று வருகிறேன். 20–க்கும் மேற்பட்ட
முறை பரிசுகள் பெற்றுள்ளேன். எங்களாலும் சாலையில் பாதை காட்ட முடியும்
என்பதை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும்’ என்றார்.







