மதுரை வழக்குரைஞர் பி.அசோக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவின் விவரம்:
சட்டப் படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு 2002-இல் அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து 2008-இல் சட்டப் படிப்புக்கான விதிகளை இந்திய பார் கவுன்சில் வரையறை செய்தது. அதன்படி, இந்திய அளவில் முதன்முறையாக சட்டப் படிப்புக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 3 நபர்கள் குழுவும் சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தது.
இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் சேர்க்கையில் வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.
மத்திய சட்டத் துறைச் செயலர், இந்திய பார் கவுன்சில் செயலர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழு செயலர், டாக்டர் அம்பேக்தர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.








