இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இதுதொடர்பான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது. எந்தவிதப் புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மணிவாசன் கோரினார்.
முதல்கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும், அதைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரை பல பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் உள்ளதால் பணி நிரவலுக்குப் பிறகு கடைசியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.








