கோடை விடுமுறைக்கு பின், தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நேற்று
முதல் மீண்டும் திறக்கப்பட்டன. யோகா மற்றும் பிரார்த்தனையுடன் வகுப்புகள்
துவங்கின. 'சென்டம்' வாங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சான்றிதழ்
மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.புதிய கல்வி ஆண்டின்
துவக்க நாள் என்பதால், பள்ளிகளில் காலைப் பிரார்த்தனை கூட்டம்
நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, அடுத்த வகுப்புக்கு சென்றதற்கான
வாழ்த்துகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டன.பிரார்த்தனை துவங்கும் முன்,
மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர். பின், தலைமை ஆசிரியர் தலைமையில்,
பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வில், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பெயர் வாசிக்கப்பட்டு
வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில்,
'சென்டம்' எடுத்த மாணவர்களின் ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் சிறப்பு
சான்றிதழ்கள் வழங்கினர். சென்னை, எழும்பூர் பிரசிடென்சி மாநில மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2, 10ம் வகுப்பில்,
'சென்டம்' எடுக்கப்பட்ட பாட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு, தலைமை
ஆசிரியை புஷ்பா, சிறப்புச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி வாழ்த்தினார்;
இனிப்புகளும் பரிமாறப்பட்டன.
மாணவர்களின் ஒழுக்கங்கள், பள்ளிகளில்
நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து, அறிவுரைகள் வாசித்து காட்டப்பட்டன.
ஒருசில அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில், சாக்லேட், இனிப்பு வகைகள்
வாங்கி, மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.
பிரார்த்தனை
கூட்டம் முடிந்ததும், மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப்
புத்தகங்கள், சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வகுப்புகள் துவங்கின.
இதுகுறித்து,
ஆசிரியர்கள் கூறும்போது, 'முதல் நாளில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள்
இனிப்புகள் வழங்கியதும், ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும்
அதிகாரிகள் இனிப்பு வழங்கியதும், மகிழ்ச்சியான ஒன்று.
வரும்
கல்வி ஆண்டில், அரசுப் பள்ளி மாணவர்களை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வுகளில், அதிகளவில் மாநில ரேங்க் பெற சூளுரைத்து உள்ளோம். இந்த
லட்சியத்தை அடைய, இந்த ஆண்டு, 'சென்டம்' எடுத்த பாட ஆசிரியர்களுக்கு,
சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது' என்றனர்.







