டாக்டர்கள் மருந்துச் சீட்டில் தெளிவாக, பெரிய எழுத்துகளில்,
பொதுப்பண்புள்ள மருந்தை எழுத வேண்டும் என்ற, மத்திய அரசின் முடிவால், கடை
கடையாக அலைய வேண்டியதில்லை; மருத்துவச் செலவும் குறையும்' என, டாக்டர்கள்,
நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளுக்கு தரும்
மருந்துச் சீட்டில், மருத்துவர்கள் இஷ்டம் போல் கிறுக்காமல், தெளிவாக
எழுதும் வகையில், அரசிதழில் அறிவிப்பு வெளியிட, மத்திய சுகாதார அமைச்சகம்
திட்டமிட்டு உள்ளது. இதன்படி, டாக்டர்கள் இனி, நோயாளிகளுக்கு தரும்
மருந்துச் சீட்டில், தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது
கட்டாயம்.
இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் தேசிகன்: என்ன
மாத்திரை என தெரியாமல், மாத்திரைக்காக, கடை கடையாக அலையும் நிலை வராது.
தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், கணினி மூலம், 'பிரின்ட்' எடுத்து தரலாம்.
பொதுமக்களும், 'தெளிவாக எழுதிக் கொடுங்கள்' என, வெளிப்படையாக கேட்க
வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன்: டாக்டர்கள்
மருந்தின் பெயர், அளவு தெளிவாக, புரியும்படி எழுத வேண்டும்; மருந்து ஒரே
பெயரில் இருந்தாலும், சில நிறுவன தயாரிப்புகளின் தரம் சரியாக இல்லாததால்,
எந்த நோய்க்கு எந்த மாதிரியான, எந்த பிராண்ட் என, டாக்டர்கள் முடிவு
செய்வதே நல்லது. அரசு விதிமுறைக்கு மாறாக செயல்பட்டாலோ, தவறான மருந்தை
பரிந்துரைத்தாலோ, டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்ரவீந்தரநாத்:
அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது; இதை அறிவுரையாக அல்லாமல், சட்டமாக கொண்டு
வந்தால், சிக்கல்கள் தீரும்; பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவர்.
இந்திய பொது சுகாதார சங்க, தமிழக தலைவர் இளங்கோ:மருந்து,
அளவு, சாப்பிடும் முறை மூன்றும், தெளிவாக எழுத வேண்டும்; தமிழ் மொழியில்
எழுதினால், இன்னும் நல்லது. டாக்டர்களிடம், ஒரு ஒழுங்குமுறை வேண்டும்.
'பிராண்ட்' பெயரில் இன்றி, மூலக்கூறு அடிப்படையிலான மருந்து எழுதுவதால்,
டாக்டர்கள், மருந்து நிறுவனங்களுடனான, மறைமுக ஒப்பந்தம்குறையும்.
முக்கியமாக, நோயாளிகளுக்கு மருத்துவச் செலவு குறையும்.இவ்வாறு, பலரும்
கருத்து தெரிவித்து உள்ளனர்.







