கடந்த ஜூன் 28ஆம் தேதி ஆசிய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் சீனாவில்
நடைபெற்ற தடகள போட்டியில் கலந்து கொண்டு, குண்டு எரிதல் போட்டியில் 13.82
மீட்டர் தூரம் வீசி தங்க பதக்கம் வென்றிருக்கிறார்.பிளஸ்-2
மாணவர்களுக்கான ஆசிய தடகள போட்டி, கடந்த ஆண்டு நடந்தபோது 12.81 மீட்டர்
தூரம் குண்டை வீசி தங்கப் பதக்கம் வென்றது ஆசிய அளவிலான சாதனையாக இருந்தது.
ஆனால், தற்போது 13.82 மீட்டர் தூரம் குண்டை வீசி தங்கம் பதக்கம் பெற்று
அந்த சாதனையை முறியடித்திருக்கிறார் 'தங்க மங்கை' கௌரி.
தங்க
பதக்கம் வென்றதையடுத்து, கௌரியை சந்தித்து பேசினோம். ''6வது படிக்கும் போதே
எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். படிப்பதை தவிர்த்து விளையாட்டிலேயே
அதிகமான நேரத்தை செலவிடுவேன். இதற்கு முன்பு நடந்த மாநில அளவிலான
போட்டிகளில் 5 முறை தங்கப்பதக்கம் வென்றிருக்கிறேன். இதேபோல், தமிழக
முதல்வர் பதக்கமும் பெற்றிருக்கிறேன்.
நான் பத்தாம் வகுப்பில்
பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்காமல் மாநில அளவிலான போட்டிகளுக்கு சென்றுள்ளேன்.
அதேநேரத்தில் நன்றாக படிக்கவும் செய்வேன். எனது வருங்கால ஆசையே மருத்துவம்
படிப்பது தான். அதற்கு இந்த விளையாட்டு எனக்கு உதவி செய்யும் என்றும்
நம்புகிறேன்.
எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. அந்த
வறுமை தான் என்னை இந்த அளவிற்கு முன்னேற செய்தது. அந்த கஷ்டத்தை பார்த்து
எந்த நாளும் சோர்வடையவில்லை. அதனை எதிர்த்து போராடி, பல துன்பங்களுக்கும்
இடையில்தான் இந்த வெற்றியை அடைந்துள்ளேன்.
தினமும் காலையில், கம்பு,
கோதுமை, குதிரைவாலி, தினை, உளுந்து, மக்காச்சோழம் போன்ற சிறுதானியங்களின்
கூழ் குடித்து விட்டுதான் விளையாட்டுக்கான பயிற்சி எடுத்துக்கொள்வேன்.
அதேபோல், புதியதாக ஒரு செருப்பு வாங்கக்கூட முடியாத காரணத்தால் அறுந்து போன
செருப்பை அணிந்துக் கொண்டுதான் தற்போது நடந்த விளையாட்டிலும், விளையாடி
தங்கம் பெற்றிருக்கிறேன். இதேபோல் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும்
என்பதே என் லட்சியம்.
வறுமை ஒருபக்கம் இருந்தாலும், எனது பெற்றோர்
எனக்கு மிகவும் ஊக்கம் கொடுத்தார்கள். எனது அப்பாதான் தினமும்
ப்ராக்டிஷ்-க்கு கூட்டிட்டு போவாங்க. அதேபோல், எங்க கோச் 'சரவணன் சுதர்ஸன்'
எனக்கு பல உதவிகளை செய்திருக்காங்க. போட்டியில் கலந்து கொள்வதற்காக
வெளியூர்களுக்கு செல்ல பணம் தேவைப்படும்போதுகூட அவர் கொடுத்து
உதவியிருக்கிறார்.'' அமைதியாக கூறி முடித்தார் தங்க மங்கை.
கௌரியின்
தந்தை ஜெயமூர்த்தி கூறுகையில், ''எனது மனைவி தனலெட்சுமி. எங்களுக்கு கௌரி
சங்கரியும், இன்னொரு பையனும் உள்ளனர். எனக்கு நிரந்தர வேலை கிடையாது.
எலக்ட்ரீசியன் வேலை செய்வேன். யாராவது எப்போதாவது வேலை கொடுத்தால்தான்
உண்டு. வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.
எனது மகள் கௌரி
விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவள். எப்படியாவது ஒருநாள் அவள்
விளையாட்டில் சாதிப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதனால், எந்த
கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு, அவளுக்கு தேவையானதை செய்து வந்தோம்.
எனக்கு சரியான வருமானம் இல்லாததால், வட்டிக்கு கடன் வாங்கிதான்
குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இதனால், எனது மகள் விளையாட்டுக்கான
பயிற்சி எடுக்கும்போது சத்தான உணவு கொடுக்கக்கூட முடியவில்லை. அவளுக்கு
தினமும் கூழ்தான் கொடுப்போம்.
அதேபோல், நாகர்கோவில் நடந்த மாநில
அளவிலான போட்டி ஒன்றுக்கு என் மகள் கௌரியை அழைத்து சென்றிருந்தேன்.
அப்போது, இரவு நேரத்தில் தங்குவதற்குகூட வழியில்லாமல், விளையாட்டு
அரங்கத்தின் வாயிலில்தான் படுத்து உறங்கினேன். அதேபோல், ஒருமுறை செருப்பு
கூட வாங்க முடியாத அளவிற்கு எனக்கு கஷ்டம் வந்தது. இதனால், என் மகள்
அறுந்துபோன செருப்பை அணிந்துகொண்டு, விளையாடிதான், இந்த தங்கத்தை கொண்டு
வந்திருக்கிறாள் எனது மகள் தங்கமங்கை'' என ஆனந்த கண்ணீர் வடித்தார்.
குடும்ப வறுமையிலும், சாதித்து காட்டியுள்ள தங்க மங்கை கௌரி சங்கரி மென்மேலும் பல விருதுகளை பெற நாமும் வாழ்த்துவோம்!ரி