மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 2–ம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது
2–ம் கட்ட கலந்தாய்வு
கடந்த மாதம் 19–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை மருத்துவ படிப்புக்கான
முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த முதல்கட்ட கலந்தாய்வில் தமிழக
மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து
257 இடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் இந்த கலந்தாய்வில் கல்வியிடங்களுக்காக
தேர்வு செய்யப்பட்டவர்களில் 141 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. எனவே இந்த
கல்வியிடங்கள் காலியாகவே இருந்தது. மேலும், இடங்களை உறுதிபடுத்திக்கொள்ள
மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரும் விதமாக 2–ம் கட்ட கலந்தாய்வு தேதி
அறிவிக்கப்பட்டது.
2,600 பேருக்கு அழைப்பு
அதன்படி, மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 2–ம் கட்ட கலந்தாய்வு
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. இந்த
கலந்தாய்வில் கலந்துகொள்ள மொத்தம் 2,600 பேருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
25–ந்தேதி வரை கலந்தாய்வு
கலந்தாய்வினை மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி
நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரசு மருத்துவக்கல்லூரிகளில் 7
எம்.பி.பி.எஸ். இடங்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 109 இடங்களும்,
அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் 25 இடங்களும், சுயநிதி பல்
மருத்துவக்கல்லூரிகளில் 912 இடங்களும் என மொத்தம் 1,053 இடங்கள் காலியாக
உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்காவும், மறுமாற்றம் வேண்டும்
மாணவர்களுக்காகவும் 2–ம் கட்ட கலந்தாய்வு இன்று (நேற்று) தொடங்கியுள்ளது.
இந்த கலந்தாய்வு 25–ந்தேதி வரை நடக்கிறது. தற்போது வரை 1,056
மாணவ–மாணவிகளிடம் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மருத்துவக்கல்லூரி
மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறியதாவது:–
மருத்துவ
படிப்புக்கான 2–ம் கட்ட கவுன்சிலிங் தற்போது நடந்து வருகிறது. முதலாவதாக
நடந்த கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு இடத்தேர்வு பெற்ற மாணவர்கள் சிலர்
சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் சேரவில்லை. இதனால் அரசு மருத்துவ
கல்லூரிகளில் 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில்
25 இடங்களும் காலியாயின.
இந்த கலந்தாய்வில் முதல் இடத்தை பிடித்த
மாணவர் தேவேந்திரன், 2–ம் மற்றும் 3–ம் இடத்தினை பிடித்த மாணவிகள் முறையே
பவித்ரா, சந்தியா ஆகியோர் சிவகங்கை மருத்துவக்கல்லூரியை தேர்வு
செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.







