கடந்த 2011–ம் ஆண்டுக்கு பிறகு தங்கம் விலை ரூ.19 ஆயிரத்துக்கு கீழ்
சென்று, நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்து 864–க்கு விற்பனை
செய்யப்பட்டது.
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தொடர் சரிவை நோக்கி
சென்று கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் (ஜூன்) 30–ந்தேதி ஒரு பவுன் தங்கம்
ரூ.20 ஆயிரத்து 72–க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், விலை
தொடர்ந்து சரிந்த வண்ணமே இருந்தது.
கடந்த 20–ந்தேதி ஒரே நாளில்
கிராமுக்கு ரூ.32–ம், பவுனுக்கு ரூ.256–ம் குறைந்து ஒரு பவுன் தங்கம் 19
ஆயிரத்து 216–க்கு விற்பனை ஆனது. அதே போல் நேற்று முன்தினமும் தங்கம் விலை
குறைந்து காணப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை ரூ.19 ஆயிரத்துக்கு கீழ்
செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே, நேற்றும் தங்கம் விலை சரிந்து, ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
கடந்த 2011–ம் ஆண்டு...
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து
385–க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்து 80–க்கும் விற்பனை
செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.27–ம், பவுனுக்கு ரூ.216–ம்
அதிரடியாக குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 358–க்கும், ஒரு பவுன்
தங்கம் ரூ.18 ஆயிரத்து 864–க்கும் விற்பனை ஆனது.
கடந்த 2011–ம்
ஆண்டு ஆகஸ்டு மாதம் 4–ந்தேதிக்கு பிறகு, நேற்று தங்கம் விலை ஒரு பவுன்
ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை
போலவே வெள்ளி விலையிலும் சிறிது மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு 20
காசும், கிலோவுக்கு ரூ.205–ம் குறைந்து, நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.33
ஆயிரத்து 825–க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து தங்கம் விலை
சரிவை நோக்கி செல்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், இதே நிலை
தொடர்ந்து நீடிக்குமா? என்பது குறித்தும் சென்னை வைரம் மற்றும் தங்கம்
வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி ‘தினத்தந்தி’ நிருபரிடம்
கூறியதாவது:–
இதே நிலை நீடிக்காது
ரஷியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கிரீஸ், சீனா, இத்தாலி போன்ற நாடுகள்
பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பின்நோக்கி சென்று கொண்டு
இருக்கின்றன. இதன் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள்
முன்வராமல் இருக்கின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு குறைந்து விலையும்
சரிந்துள்ளது. இதே நிலை நீடிக்காது.
பொருளாதார பிரச்சினையில் இருந்து
மீள்வதற்கு ஏற்கனவே உபரியாக வைத்துள்ள தங்கத்தை பொருளாதார நெருக்கடியில்
உள்ள நாடுகள் விற்பனைக்காக கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்யும் பட்சத்தில் தங்கத்தின் விலை
அதிகரிக்கும். அந்த காலக்கட்டங்களில் எந்த அளவு தங்கம் விலை குறைந்ததோ? அதே
போல் தங்கம் விலை உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.







