ஹெல்மெட் கட்டாயம் என்றும், அணியாதவர்களின் வாகன ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படும் என்ற தமிழக அரசாணையை எதிர்த்தும் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை
சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் உதவியாளரான டி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
அரசாணைக்கு தடை
ஜூலை 1–ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர்கள், பின்னால்
அமர்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட்
அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம், அதன் பதிவு சான்றிதழ், ஓட்டுனர்
உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக உள்துறை செயலாளர் கடந்த
18–ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவு மோட்டார் வாகன
சட்டத்துக்கு எதிரானது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை
ஓட்டியவருக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் மட்டுமே விதிக்க
முடியும். எனவே, கடந்த 18–ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை
விதிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
மனுக்கள் தள்ளுபடி
அதேபோல, நியூ இந்தியா மக்கள் அமைப்பு என்ற அறக்கட்டளையின் தலைவர்
ஜெ.எஸ்.நிம்முவசந்த் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்,
‘ஹெல்மெட் அணிவது பெண்கள், குழந்தைகளுக்கு முடியாத காரியம். கொண்டைபோடும்
பெண்களால் ஹெல்மெட் அணிய முடியாது. எனவே, வாகனத்தில் பின்னால் அமர்ந்து
இருக்கும் பெண்கள், குழந்தைகளும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை ரத்து
செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி
சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று
விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்குகளை
பொதுநல வழக்காக ஏற்கமுடியாது. கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற தமிழக
அரசின் உத்தரவை அமல்படுத்துவதை தள்ளிவைக்க வேண்டும் என்ற மனுதாரர்கள்
தரப்பு வாதத்தையும் ஏற்கமுடியாது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்’
என்று உத்தரவிட்டனர்.







