சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக
மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான கலந்தாய்வு
(Councilling) நாளை (ஜூலை 1) புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான
மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த மே 10-ம் தேதி முதல்
தொடங்கப்பட்டது. விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் ஜூன் 22-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து
படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டன.
பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 பேரும்,
பிடிஎஸ் படிப்பில் 80 பேரும் மாணவ, மாணவியர்கள் தனி கலந்தாய்வு மூலம்
அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 5940
விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1438 விண்ணப்பங்களும்
வரப்பெற்றன. பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை சீட்டு தாபல்
மூலம் அனுப்பப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கு
விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண்களை (ரேண்டம் எண்) கடந்த ஜூன் 27-ம்
தேதி சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் துணைவேந்தர் செ.மணியன்
வெளியிட்டார்.
மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே
சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகஅரசு இடஒதுக்கீடு
விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான
படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல்
தயார் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழகஅரசின்
விதிப்படி ஒதுக்கப்படும்.
அனுமதி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள்
பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு
அழைக்கப்படுவார்கள். எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை
1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாகஅலுவலக கட்டடத்தில்
நடைபெறுகிறது. எம்பிபிஎஸ் படிப்பிற்கு ஜூலை 1-ம் தேதி காலை தொடங்கி 2-ம்
தேதி பிற்பகல் வரையும், பிடிஎஸ் படிப்பிற்கு ஜூலை 2-ம் தேதி பிற்பகல்
தொடங்கி 3-ம் தேதி மாலை வரை நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு
கலந்தாய்வு அழைப்பு கடிதம் விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல் (SMS) மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகக இணையதளத்தில்
www.annamalaiuniversity.ac.in மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் auadmission2015@gmail.com என்ற முகவரியிலும், மைய தொலைபேசி எண்கள்
04144-238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என
பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.








