புறநகர் மின்சார ரயில், விரைவு ரயில்களில் அளிக்கப்படும் பயணச் சீட்டில்
ஊர்களின் பெயர் தமிழில் இடம் பெற வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.இதனால், தமிழ் மொழியை மட்டுமே படிக்கத் தெரிந்த பயணிகள் அவதிக்குள்ளாவது தவிர்க்கப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவாகவும், உடல்வலி இன்றியும் செல்ல பயணிகள் பெரிதும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
சென்னை
புறநகர் ரயில்களிலும், விரைவு ரயில்களிலும் தினமும் பலர் பயணிக்கின்றனர்.
அனைவருக்கும் ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாது. பெரும்பாலும் வட்டார மொழி
தெரிந்தவர்களே இந்த ரயில்கள் அதிகம் பயணிக்கின்றனர். புறநகர் ரயில்களிலும், விரைவு ரயில்களிலும் பயணிப்பவர்களுக்கு ஆங்கிலம், இந்தியில் அச்சடிக்கப்பட்ட பயணச் சீட்டுகளே அளிக்கப்படுகின்றன.
இதனால் தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பயணிகள் பிறமொழியால் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
பயணச் சீட்டில் தனது பெயர் உள்ளதா? பயணச் சீட்டில் ஊரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கிறதா? எந்தப் ரயில்பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இதற்காக அவர்கள் பிறரின் உதவியை நாடி செல்ல வேண்டியுள்ளது. முன்னர் புறநகரில் ரயில்களில் அளிக்கப்படும் மஞ்சள் நிற பயணச்சீட்டில் தமிழ் மொழியும் இடம் பெற்றிருந்தது.
ஆனால், காலப்போக்கில் மின்னணு பயணச்சீட்டு வந்ததும் தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே ஊரின் பெயர் அச்சடிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.
பெயர் பட்டியல்: அதுபோல நெடுந்தூரம் செல்லும் விரைவு ரயில்களில் பயணிகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பட்டியலாகத் தயாரிக்கப்பட்டு ரயில் பெட்டியில் ஒட்டப்படுகிறது.
பெட்டியில் ஒட்டப்படும் பெயர் பட்டியலை வைத்து ரயில் ஏறி செல்வது தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. தமிழை செம்மொழியாக அறிவித்த மத்திய அரசு அதற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பயணச்சீட்டுகளை வட்டார மொழியான தமிழில் அச்சடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.







