தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’டை அணிந்து வாகனங்களை செலுத்த வேண்டும் என்பது இன்று முதல் கட்டாயமாகிறது.
ஐகோர்ட்டு உத்தரவு
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த வழக்கில், சென்னை
ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், கடந்த 8–ந் தேதி உத்தரவு ஒன்றை
பிறப்பித்தார். அதில், ‘‘ஜூலை 1–ந் தேதி முதல் (அதாவது இன்று), இரு சக்கர
வாகன ஓட்டிகள் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். இதற்கான அறிவிப்பை ஜூன்
18–ந் தேதிக்கு முன்பதாக உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் வெளியிட
வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்’’ என்று
குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் 17–ந் தேதி
‘ஹெல்மெட்’ குறித்த அறிவிப்பை உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா
வெளியிட்டார். அதில், ‘ஜூலை 1–ந் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டுனரும்,
அதில் பயணிக்கும் மற்றவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.
இல்லாவிட்டால், ஓட்டுனர் உரிமம் உள்பட அந்த இரு சக்கர வாகனத்தின் அனைத்து
ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும்’’ என்று கூறியிருந்தார்.
மேலும்,
இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய ‘ஹெல்மெட்’டை வாங்கி, அதற்கான ரசீதை
காட்டினால் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும்
என்றும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் எச்சரிக்கை
இதுசம்பந்தமாக போலீஸ் தரப்பிலும் அறிக்கை விடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
‘ஹெல்மெட்’
அணியாமல் வாகனத்தில் செல்பவரிடம் இருக்கும் அசல் ஆவணங்கள், ஓட்டுனர்
உரிமம் போன்றவை பறிமுதல் செய்யப்படும். அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. தரமுள்ள ‘ஹெல்மெட்’டை வாங்கி, அதன் ரசீதை அவர் கோர்ட்டில் காட்டி,
அசல் ஆவணங்களை வாங்கிக்கொள்ளலாம்.
பிடிபடும்போது அசல் ஆவணங்கள்
இல்லாவிட்டால், அந்த இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு அருகில் உள்ள போலீஸ்
நிலையத்தில் வைக்கப்படும். அசல் ஆவணங்களைக் கொண்டு வந்து காட்டினால், அந்த
ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வாகனம் விடுவிக்கப்படும்.
ஆனால் அந்த அசல்
ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் புதிய ‘ஹெல்மெட்’டை
வாங்கி, ரசீதை காட்டி கோர்ட்டில் இருந்து அந்த ஆவணங்களை அந்த நபர்
பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அலைய வேண்டியதிருக்கும்
எனவே ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனத்தை செலுத்தினால், போலீஸ்
நிலையம், கோர்ட்டு என்று அலைந்து காலநேரத்தை வீணாக்க வேண்டியதிருக்கும்.
மேலும், வேண்டாத மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே அதை தவிர்ப்பதற்கு
நேற்றே பெரும்பாலானோர் கடைகளுக்கு சென்று ‘ஹெல்மெட்’களை வாங்கிக்கொண்டனர்.
கடந்த
மே மாத கணக்குப்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 69 லட்சம் இருசக்கர வாகனங்கள்
ஓடுகின்றன. இவற்றில் சென்னையில் மட்டும் 35 லட்சம் இருசக்கர வாகனங்கள்
உள்ளன. தமிழகத்தில் ஓடும் வாகனங்களில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 83
சதவீதமாகும்.
ஏமாற்றம்
சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ‘ஹெல்மெட்’களின் விலையை
நேற்று கடைக்காரர்கள் தாறுமாறாக உயர்த்தினர். வாகன ஓட்டிகளும் கடைசி நாள்
என்பதால் வேறு வழியின்றி கடைக்காரர்கள் நிர்ணயித்த விலைக்கு
‘ஹெல்மெட்’டுகளை வாங்கிச்சென்றனர்.
சிலர் 10–க்கும் மேற்பட்ட
‘ஹெல்மெட்’களை ஒரே நேரத்தில் வாங்கிச்சென்றனர். ‘ஹெல்மெட்’களை தேடி வாகன
ஓட்டிகள் இன்றும் கடைகளுக்கு படையெடுக்கக்கூடும் என்பதால் வியாபார
நோக்கத்தில் சிலர் கூடுதலாக ‘ஹெல்மெட்’களை வாங்கிச்சென்றனர்.
இதனால்
அண்ணாசாலை, ராயப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ‘ஹெல்மெட்’
கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பல கடைகளில் பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கான ‘ஹெல்மெட்’கள் கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் மற்றும்
குழந்தைகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.







