இது தொடர்பாக யுஜிசி செயலர் ஜஸ்பால் எஸ். சந்து, அனைத்துப் பல்கலை.களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களுக்குப் பலதரப்பட்ட பயன்கள் அளிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு, உயர் கல்வியில் மதிப்பீடு சார்ந்த அணுகுமுறையை யுஜிசி முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. மதிப்பீடு சார்ந்த கல்வியானது மாணவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக் கூடிய சமூக, உறவுமுறைத் திறன்கள் மற்றும் கல்வி இலக்கை எட்டுவதற்கான வலுவான கற்றல் சூழலை உருவாக்குகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பொதுவான மதிப்பீடுகளின் அடித்தளம் அமையப் பெற்ற செறிந்த பாரம்பரியக் கல்வியைக் கொண்ட தேசமாக இந்தியா மிளிர்கிறது.
இச்சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த தத்துவவியல் அறிஞர் திருவள்ளுவர் தமிழ் இலக்கியத்திற்கு மிகப் போற்றத்தக்க பங்களிப்பை திருக்குறள் வாயிலாக அளித்துள்ளார். திருக்குறள் தொன்மையான தமிழ்ப் படைப்புகளில் மிகவும் போற்றத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் மேன்மை மற்றும் மனித அறநெறிகள் ஆகியவை தொடர்பான உள்ளார்ந்த கருத்துகளைக் கொண்டுள்ளதன் காரணமாக திருக்குறள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
ஆகவே, சிறப்புமிக்க கருத்துகளை சமுதாயத்தின் நலனுக்காக அளித்துள்ள திருவள்ளுவரின் வாழ்க்கை, அவரது படைப்புகள் ஆகியவை குறித்த கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்கங்கள், விவாதங்கள் ஆகியவற்றை பல்கலைக்கழகங்களிலும், அதன் இணைவிப்புக் கல்லூரிகளிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
திருவள்ளுவரின் செறிந்த கருத்துகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மோதல் உறவின் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மேலும், சமூக உறவுத் திறன்கள் மற்றும் வெற்றி பெறுவதற்கான மனப்பான்மையை வளர்த்தெடுக்கும். எனவே, திருவள்ளுவரின் படைப்புகள் தொடர்பான மேலேசொன்ன செயல்பாடுகளை பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டும். மேலும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையையும் யுஜிசிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








