இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முதல் நாளில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சிறப்பாசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு இணையதள வழியாக நடைபெற்றது.
அந்தந்த மாவட்டத்துக்குள் 592 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கோரிய சுமார் 100 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்றனர். இதேபோல மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கோரிய சிறப்பாசிரியர்களுக்கு வருகிற 16-இல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையாக நடந்தது: கடந்த ஆண்டைப் போல இல்லாமல், காலியாக உள்ள அனைத்து இடங்களும் காண்பிக்கப்பட்டு வெளிப்படையான முறையில் முதல் நாள் கலந்தாய்வு நடைபெற்றது.
அடுத்து வரும் நாள்களிலும் இதேபோல வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் தெரிவித்தனர்.








