இந்நிகழ்வு, "கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது.
1942 ஜூலை 14ல் காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை என தீர்மானம் நிறைவேற்றினர். இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், "ஒத்துழையாமை இயக்கம்' என்பதை தொடங்கும் என அறிவித்தது. அதற்கு இது ஏற்ற நேரமல்ல எனக்கூறி ராஜாஜி உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்த்தனர். இதனால் 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேசிய மகாத்மா காந்தி, "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்தார். இவரது இந்த வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. ஆக.9ம் தேதி வெள்ளுடை வீரர்களான காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கிலேயர் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து, இதே ஆகஸ்ட் மாதம் தான் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.








