இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரஃபுல்லா சி.பண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மாணவர்களின் எதிர்காலம்: அப்போது, மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி.சிவபாலமுருகன், "தமிழக அரசு கடைப்பிடித்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாணவர்களுக்கும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிகளில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
அவரது வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, "தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு முடிந்துவிட்டது. விரைவில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன' என்றார்.
இதையடுத்து, நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், "தமிழக அரசு கடைப்பிடித்து வரும் இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கியது போல, நிகழ் ஆண்டிலும் பாதிக்கப்பட்ட எட்டு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.








