மொத்த ரேஷன் அட்டைகள்
தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் ரா.காமராஜ் பேசியதாவது:-
புதிய அட்டைகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 825 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 978 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரிசி கடத்தலில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 714 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 35 ஆயிரத்து 885 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 25 ஆயிரத்து 756 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 746 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
பராமரிப்புப் பணி
அதைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 219 சொந்தக் கிடங்குகள் இயங்குகின்றன. முதற்கட்டமாக 10 கிடங்குகளிலும், 5 நவீன அரிசி ஆலைகளிலும் சிறப்பு மராமத்து பராமரிப்புப் பணிகள் செய்யப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சென்னை திருவான்மியூர் கிடங்கு, ஈரோடு மாவட்டம் சேனாபதிபாளையம் கிடங்கு, நீலகிரி மாவட்டம் உதகை கிடங்கு ஆகியவற்றின் வளாகச்சாலை மேம்படுத்தப்படும். தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி தெற்குதோட்டம் கிடங்கில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
நெல் உலர்த்தும் களம்
தஞ்சாவூர் மண்டலம் பட்டுக்கோட்டை மற்றும் காஞ்சீபுரம் மண்டலம் திம்மாவரம் ஆகிய இடங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தொழிலக நீரியல் கழிவுநீரை சுத்திகரிக்க, நவீன எந்திரங்களைக் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடையாகும் நெல்லை உலர்த்துவதற்கு வசதியாக, சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக 10 உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 100 நெல் தூற்றும் எந்திரங்கள் வழங்கப்படும்.
காலிப் பணியிடம்
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்கு அலுவலகங்களில் காலியாக உள்ள 77 உதவியாளர் மற்றும் துணை சேமிப்புக் கிடங்கு மேலாளர், 34 அலுவலக உதவியாளர், 78 காவலர் என மொத்தம் 189 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் தானியங்களை பூச்சிகளின்றி பாரமரிக்க முதற்கட்டமாக 54 கிடங்குகளில் 162 நவீன புற ஊதா ஒளிப்பொறிகள் வைக்கப்படும்.
நெடுஞ்சாலை உணவகங்களிலும், வணிக நிறுவனங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் மற்றும் பொருட்கள், அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்கப்படுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.








