‘இஸ்ரோ’
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதுவரை 123 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ராக்கெட்டுகள் மூலம் 79 செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
செயற்கைகோள்கள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 21 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. 5 ராக்கெட்டுகள் வணிக ரீதியாக விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
விண்ணிற்கு செலுத்தப்பட்ட 45 செயற்கைக்கோள்கள் 19 நாடுகளை சேர்ந்தவையாகும். 27 செயற்கைக்கோள்கள் நம் நாட்டுக்கு சொந்தமானவை ஆகும்.
‘பி.ஸ்.எல்.வி. சி-30 ராக்கெட்’
விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ‘இஸ்ரோ’ நிறுவனம் முதல் முறையாக செயற்கைகோள்களை அனுப்ப திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ‘அஸ்ட்ரோசாட்’ என்ற நவீன தொலை தொடர்பு வசதிகளுடன் கூடிய செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட் மூலம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 செயற்கைகோள்களும் பொருத்தப்படுகிறது.
நவீன கருவிகளுடன்...
இஸ்ரோ சார்பில் முதல் முறையாக விண்வெளி கிரகங்களை ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள் 4 ஊடுகதிர் ஆய்வு கருவிகள், ஒரு யு.வி. தொலைநோக்கு கருவி (டெலஸ்கோப்), ஒரு கண்காணிப்பு கருவி போன்றவற்றை சுமந்து செல்கிறது.
இந்த ஆய்வு கருவிகளை உருவாக்கியதில் இஸ்ரோவுடன் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. 2 ஆய்வு கருவிகளை கனடாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக இறுதிகட்ட ஆயத்த பணிகள் எனப்படும் ‘‘கவுண்ட்டவுன்’’, இந்த வார இறுதியில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கூறினர்.








