தமிழகத்தில் 5.66 கோடி வாக்காளர்கள்:
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.66 கோடியாகும்.வரைவு
வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் பெயர்
இருப்பதை உறுதி செய்யவும், நீக்கல், சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல்
அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிவிப்பு: 2016 ஜனவரி 1ஆம் தேதியைத்
தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத்
தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை தமிழகத் தேர்தல் இணையதளத்தில் (elections.tn.gov.in)
பார்த்துக் கொள்ளலாம்.
கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதிப்
பட்டியல் நிலவரப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.62 கோடியாக
இருந்தது. இப்போது, 2016 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக்
கொண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் மொத்த
எண்ணிக்கை 5.66 கோடியாகும். வரும் 16ஆம் தேதி, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள
கிராம சபைக் கூட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்போர் நலச்
சங்கங்களின் கூட்டங்களில் இந்த வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள்
வாசிக்கப்படும்.
சிறப்பு முகாம்கள்: வாக்காளர் பட்டியலில் பெயர்
இருப்பதை உறுதி செய்யவும், புதிதாகப் பெயர் சேர்ப்பு, நீக்கல் போன்ற பணிகளை
மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்கள் வரும் 20ஆம் தேதியும், அக்டோபர் 4ஆம்
தேதியும் நடத்தப்படும்.
இந்த சிறப்பு முகாம்கள் வாக்குச் சாவடிகள்
அமைந்துள்ள பகுதிகளில் நடத்தப்படும். அப்போது, பெயர் சேர்த்தல், நீக்கல்,
திருத்தம் போன்ற பணிகளுக்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்
என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.