ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 858 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அறிவித்தார்.
மக்கள் தொகை
தமிழக சட்டசபையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அவர்களுக்கு பதிலளித்து அந்த துறையின் அமைச்சர் ந.சுப்பிரமணியன் பேசியதாவது:-
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையான 7.21 கோடியில், ஆதிதிராவிடர்கள் 1.44 கோடியும், பழங்குடியினர் 7.95 லட்சமும் உள்ளனர். இது முறையே 20.01 மற்றும் 1.10 சதவீதமாகும்.
கல்வியறிவைப் பொறுத்தவரையில், ஆதிதிராவிடர் மக்களின் கல்வி அறிவு, பொதுப்பிரிவினரின் கல்வியறிவு விகிதத்துடன் நெருங்கி உள்ளது. ஆனால் பழங்குடியினரின் கல்வியறிவு விகிதம் சற்றே பின்னடைந்தே உள்ளது.
2014-15-ம் ஆண்டில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பினைப் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில், 2010-11-ம் ஆண்டில் இந்த படிப்பினை பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 19 மட்டுமே.
அதுபோல 2014-15-ம் ஆண்டில் பொறியியல் படித்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் 2010-11-ம் கல்வி ஆண்டில், பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை, 34 ஆயிரத்து 558 பேர் மட்டுமே ஆகும்.
தேர்ச்சி சதவீதம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 34 ஆசிரியர் பணியிடங்களில், காலியாக உள்ள 858 ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2014-15-ம் கல்வி ஆண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ், இயங்கும் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 87 சதவீதமும், 12-ம் வகுப்பில் 82 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பொதுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திற்கு இணையாகும். இதை 100 சதவீதமாக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.








