தாய் சேய் நல அலுவலர்
தாய் சேய் நல அலுவலர் காலிப்பணியிடங்கள் 89 உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு நடத்தியது. தேர்வு காலையிலும், மாலையிலும் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 21 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதியவர்களை திடீர் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.
2 மாதங்களில் முடிவு வெளியாகும்
தாய் சேய் நல அலுவலர் பணிகளை நிரப்ப தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 12 ஆயிரத்து 149 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.எஸ்சி.நர்சிங் படித்தவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். சென்னையில் 21 மையங்களும், மதுரையில் 11 மையங்களும், கோவையில் 8 மையங்களையும் சேர்த்து மொத்தம் 40 மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த தேர்வுக்கான வினா- விடை (கீ-ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்கள் அல்லது 2 மாதங்களில் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேர்முகத்தேர்வுடன்கூடிய குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.
புதிய முறை
வழக்கமாக ஒரு தேர்வர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஒரு விவரம் கொடுப்பார். ஆனால் சான்றிதழ் சரிபார்த்தலின்போது வேறு ஒரு விவரம் தருவார்கள். மேலும் பணம் கட்டி ஒருமுறை விண்ணப்பிப்பார். அதே தேர்வுக்கு பணம் கட்டாமல் வேறு ஒரு முறை விண்ணப்பிக்கிறார். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கும் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து சில முறை விலக்கு உண்டு. பணம் கட்டுவதில் இருந்து அளிக்கப்படும் விலக்கை பயன்படுத்திய பிறகும் சிலர் விவரம் தெரியாமல் பணம் கட்டாமல் விண்ணப்பித்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் விண்ணப்பம் கடைசி நேரத்தில் நிராகரிக்கப்படுகிறது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய முறையை அடுத்த வாரம் கொண்டுவரப்பட உள்ளது.
தேர்வர்கள் சுய விவர பக்கம்
புதிய முறைக்கு ‘தேர்வர்கள் சுய விவர பக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுத உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலக இணையதளத்தில் ஒருபக்கம் ஒதுக்கப்படும். அதாவது தேர்வர்களுக்கு தனி ரகசிய கோடு, உண்டு. இதை தேர் வர்களே ஏற்படுத்தலாம். அவர் கள் என்ன படித்திருக்கிறார் களோ அதை அந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம். சாதி சான்றிதழ் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவேற்றம் செய்யலாம்.
ரகசிய கோடை மறந்துவிட்டாலும் அதற்கு டி.என்.பி.எஸ்.சி. பரிகாரம் கொடுக்கும். மேலும் அவர்கள் கட்டணத்தை செலுத்தி உள்ளார்களா? என்பதை அந்த பக்கம் காண்பித்து விடும். தகுதி இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த ‘தேர்வர்கள் சுய விவர பக்கம்’ கொண்டுவரப்படுகிறது. அதாவது அவர்களின் விவரம் சேகரிப்பதற்காகவே இந்த முறை அடுத்த வாரம் கொண்டுவரப்படுகிறது. இந்த பக்கத்தை பார்த்தால் அவர்கள் பற்றிய முழு விவரமும் தெரியவரும்.
இது குறித்த முழு விவரத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடும்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.








