கருணாநிதி
தி.மு.க. தலைவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
‘நல்லாசிரியர் விருது‘ என்பதை, “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது“ எனப் பெயர் மாற்றியதுடன் விருதுத் தொகை 500 ரூபாய் என்பதை 1989–ல் ஆயிரம் ரூபாய் என்றும், 1997–ல் 2000 ரூபாய் என்றும், 2008–ல் 5000 ரூபாய் என்றும் படிப்படியாக உயர்த்தி வழங்கியதுடன், வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம், ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் ஆணைகள் என வழங்கி தமிழக ஆசிரியர் சமுதாயத்தைத் தொடர்ந்து அரவணைத்த – இன்றும் ஆதரிக்கின்ற பாசநெஞ்சத்தோடு தமிழக ஆசிரியர்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான, கல்வியை வழங்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். ஆசிரியர் தினத்தை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவின் எதிர்கால குடிமக்களை உருவாக்குகிற மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அத்தகைய குடிமக்கள் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகிறார்கள். அப்பெரும்பணியை செய்கிற ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில்
ஆசிரியர்களின் இப்போதைய நிலையை மாற்றி ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தரமான, தமிழ் மொழி வழிக் கல்வியை வழங்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில்
மகத்துவம் மிக்க ஆசிரியர் பணியில் ஈடுபட்டு மாபெரும் சேவையாற்றிவரும் ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.








