முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்தியதற்காக, ஒடிசா
மாநிலம் பாலாசூர் மாவட்டம் புடகுந்தா என்ற இடத்தில் உள்ள அரசு
பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.அவர் கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி திட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக
அருகில் உள்ள ஊருக்கு சென்று இருந்தார். அன்று அங்கிருந்தபடி அவர், தான்
பணிபுரியும் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டு, முன்னாள் பிரதமர்
வாஜ்பாய் இறந்து விட்டதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும், எனவே அவரது
மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு அன்று விடுமுறை
அளித்துவிடுமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவர் கேட்டுக்கொண்டபடி, பள்ளிக்கூடத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்பிறகுதான் வாஜ்பாய் பற்றி தலைமை ஆசிரியர் தெரிவித்த தகவல் தவறானது
என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தான் செய்த தவறுக்காக தலைமை ஆசிரியர் மன்னிப்பு
கேட்டுக்கொண்டார். என்றாலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த தலைமை
ஆசிரியரை ஒடிசா மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.