சிறப்பு தொழுகை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையொட்டி 40-வது நாள் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. ராமேசுவரம் முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் ஆலிம்கள் அப்துல்ரகுமான் சர்புதீன் ஆகியோர் குரான்ஓதி சிறப்பு தொழுகை செய்தனர்.
அஞ்சலி
பின்னர் பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சி.பி.ஐ. ஓய்வுபெற்ற இயக்குனர் கார்த்திகேயன், நடிகர்கள் தாமு, ராகவா லாரன்ஸ், சண்முகராஜா, த.மா.கா. மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, மாவட்ட பொருளாளர் நாகராஜ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், பா.ஜனதா தேசியபொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், ம.தி.மு.க. இளைஞரணி துணைச்செயலாளர் கராத்தே பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.அசன்அலி, தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் திலீப்காந்த், நகர் செயலாளர் முத்துகாமாட்சி உள்பட முக்கிய பிரமுகர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா கல்விக்குழுமம் சார்பில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அப்துல்கலாமின் 10 பொன்மொழிகளை கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேசிய அறிவுக்கூடம்
பின்பு அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், பேரன்கள் சேக்தாவூத், சேக்சலீம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அப்துகலாம் அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் டெல்லியில் அவர் வாழ்ந்த வீட்டிலோ அல்லது மத்திய அரசு தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு இடத்திலோ அப்துல்கலாம் தேசிய அறிவுக்கூடம் என்ற பவுண்டேசனை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்பெறும் வகையில் இது செயல்படவேண்டும். இந்தியாவை உலக அளவில் அறிவார்த்த ஆராய்ச்சி மையமாக உருவாக்கும் அறிவுத்தலமாக இது செயல்படவேண்டும். மாணவர்கள், இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள், கற்பனைத் திறன், ஆராய்ச்சி, போட்டிதிறன் வளர்க்கும் இடமாக அமையவேண்டும்.
இந்தியாவின் முக்கியமான ஆராய்ச்சி செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங் களோடு இணைந்து இது செயல்படவேண்டும். இதன்மூலம் கலாமின் கனவான மகிழ்ச்சியான, அமைதியான, வளமான சமுதாயம் , எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு நீதியான, நேர்மையான, இணக்கமான, சமதர்மச் சூழல் இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்திலும் உருவாகவேண்டும்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் உழைப்பவர்களை கண்டறிந்து விருதுகள் வழங்கும் வகையிலும் அறிவார்ந்த மையங்களை, நூல் நிலையங்களை, கல்வி நிறுவனங்களை, ஆராய்ச்சி மையங்களை உருவாக்கும் வகையில் இந்த அறிவுக்கூடம் செயல்படவேண்டும்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சரையும், முதன்மை செயலாளரையும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். விரைவில் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்.
லட்சிய இந்தியா இயக்கம்
கடந்த 40 நாட்களாக மக்களிடம் இருந்தும், இளைஞர்கள், மாணவர்களிடம் இருந்தும் அப்துல்கலாம் விதைத்த லட்சியக் கனவு பணியை தொடரவும் விழிப்புணர்வு பெற்ற லட்சிய இளைஞர்களை உருவாக்கும் பணியை வழிநடத்திச்செல்லவும் ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை வந்தது.
இதை ஏற்று கிராமந்தோறும், நகரந்தோறும், மாநிலந்தோறும் மாணவர்கள், இளைஞர்கள், பள்ளி, உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய-மாநில அரசுகள் ஆகியவற்றோடு இணைந்து “அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம்” என்ற இயக்கத்தை இன்று முதல் தொடங்குகிறோம்.
கொள்கைகள்
இந்த இயக்கத்தின் நோக்கங்களாவன:-
அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற இளைஞர்களை உருவாக்குவது. லட்சிய மாணவர்களும், இளைஞர்களும் அவர்களது வளர்ச்சிக்காக எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையின் தலைமைப் பண்பை பெற்றவர்களாக உருவாக்குவது என்ற அடிப்படையில் செயல்படுவது.
அப்துல்கலாம் வகுத்துக் கொடுத்த வளர்ந்த இந்தியா -2020 என்ற தொலை நோக்கு பார்வையான 10 கட்டளைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவது, அப்துகலாம் இந்தியாவுக்கு கொடுத்த லட்சியங்களான ஒருங்கிணைந்த நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கை களை வகுப்பதில் ஒத்துழைப்பு கொடுப்பது. நதிநீர் இணைப்பை ஏற்படுத்துவதில் அதிதிறன் நீர் வழிச்சாலைகளை உருவாக்குவதில் முயற்சி எடுப்பது. 2-வது பசுமைப்புரட்சியை இயற்கை சார்ந்த முறையில் நிறைவேற்றுவதில் விவசாயம் மற்றும் அதன் மதிப்புகூட்டும் தொழில்களை உருவாக்க செயல்படுவது. தொழில்துறை, உற்பத்தித்துறை, சேவைத் துறைகளை அப்துல்கலாம் கண்ட கனவின்படி மத்திய-மாநில அரசுகளுடன் இணைந்து கொள்கை உருவாக்குவதில் உறுதுணையாக இருப்பது.
அப்துல்கலாம் கனவுத்திட்டமான புரா திட்டத்தை செயல்படுத்துவதில் எரிசக்தி சுதந்திரத்தை 2030-க்குள் அமல்படுத்த உழைப்பது. ஒரு வெளிப்படையான நேர்மையான மக்களுக்கு தேவையான சேவைகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் நிறைந்த நேர்மையான ஜனநாயக ஆட்சிமுறைமூலம் உள்ளார்ந்த வளர்ச்சிக்கான கொள்கைளை உருவாக்கி அதை மக்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மூலம் லட்சிய இந்தியாவை படைக்க உறுதுணையாக இருப்பது.
விண்வெளியில் இருந்து சூரிய சக்தி மின்சாரம் பெறும் திட்டத்திற்காக, இந்தியா மற்ற விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் நாடுகளோடு இணைந்து உழைப்பது போன்ற திட்டங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பது ஆகியனவாகும்.
தலைமையிடம், டெல்லி
இந்த தேசிய இயக்கத்தின் தலைமையிடம் டெல்லியில் இயங்கும். இந்த இயக்கத்தில் மக்கள், இளைஞர்கள் இணைந்து செயல்படும் வகையில் மாநிலங்கள், மாவட்டங் கள், நகரங்கள், கிராமங்கள்தோறும் அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் அமைப்பு, செயல்பாடு, ஒருங்கிணைப்பு,பதிவு தொடர்பாக ஆலோசனை நடத்தி விரைவில் இந்த இயக்கம் செயல்படும். இதுதொடர்பான அறிவிப்புகள் ஷ்ஷ்ஷ்.ணீதீபீ௵றீளீணீறீணீனீ.நீஷீனீ என்ற இணையத்தில் வெளியிடப்படும்.
அரசியல் சார்பற்றது
இந்த இயக்கம் அரசியல் சார்பற்ற இயக்கம். 125 கோடி மக்களுக்கும் அப்துல்கலாம் பொதுவானவர். அவர் எங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அவரது பெயரை பயன்படுத்துவது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. அவரது கனவு, லட்சியங்களை எடுத்துச்சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது. தவறு நடப்பதாக தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.








