அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், தொலைநிலைக் கல்விக்கென நாடு முழுவதும் 89 கல்வி மையங்கள், 78 தகவல் மையங்கள் உள்ளன. இதில், 26 மையங்கள் வெளி மாநிலங்களில் செயல்படுகின்றன. இந்த நிலையில், 2015-16 கல்வியாண்டில் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 14-இல் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) உத்தரவிட்டது.
யு.ஜி.சி அனுமதியில்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தினால், அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகமே பொறுப்பு எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எங்களிடம் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, யு.ஜி.சி-யின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, யு.ஜி.சி. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, இந்த மனுவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.








