ஆன்லைன் குளறுபடியால் இடத்தை இழந்த, மருத்துவக் கல்லூரி மாணவியை மீண்டும் கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
“சரண்டர்” பொத்தான்
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அப்சரா என்ற மாணவிக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். கல்வி இடம் கிடைத்திருந்தது. இந்த நிலையில் கல்லூரி சேர்க்கைக்கான கடிதத்தை கடந்த 26.8.15 அன்று கல்லூரி நிர்வாகம் அனுப்பியது.
சேர்க்க முடியாது
இந்த நிலையில், கல்லூரியில் சேர்வதற்காக கடந்த 3-ந் தேதி குடும்பத்துடன் அப்சரா சென்றிருந்தார். ஆனால் அவரது கல்வி இடம் சரண்டர் செய்யப்பட்டுவிட்டதால், கல்லூரியில் அப்சராவை சேர்த்துக்கொள்ள முடியாது என்று நிர்வாகம் கூறிவிட்டது.
கல்வி இடத்தை சரண்டர் செய்ததற்கான ஆன்லைன் ஆதாரத்தையும் காட்டினர். அது தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறியும் கல்லூரி நிர்வாகம் அதை ஏற்கவில்லை.
தெரியாமல் நடந்துவிட்டது
அதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் மாணவி அப்சரா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் முறையை முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளதால், சரண்டர் நிகழ்வு தெரியாமல் நடந்துவிட்டது. எனவே அப்சராவுக்கு மீண்டும் படிக்க இடம் தரப்படவேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அந்தப் பெண் வாங்கிய மதிப்பெண்ணின் அடிப்படையில்தான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதோடு கல்விக்கான கட்டணத்தை அவர் செலுத்திவிட்டார். அதை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில்தான் ஆன்லைன் மூலம் அந்த கல்வி இடம் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவும் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீண்டும் சேர்க்கவேண்டும்
கல்விக் கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதால், கல்லூரியில் தொடர்ந்து படிக்க மாணவிக்கு உரிமை உள்ளது. அவரது மதிப்பெண் தகுதியைக் கருத்தில்கொண்டு, மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்று உத்தரவிடப்படுகிறது. எனவே, கல்லூரியில் அப்சராவை சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








