சரசுவதி மகால், பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட நூலகமாகத் திகழ்கிறது. தஞ்சாவூரில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சோழர் காலத்தில் சரஸ்வதி மகால் நூலகம் தோன்றியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. கலை நுட்ப வேலைப்பாடுகளை கொண்ட ஓவியங்களும், மதிப்புமிக்க பழமையான புத்தகங்களும், அரிய கையெழுத்துச் சுவடிகளும் இந்நூலகத்தில் காணப்படுகின்றன.
பனை ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் அதிகளவில் இங்கு பராமரிக்கப்படுகிறது. தஞ்சையில் அமையப்பெற்ற தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு இந்த நூலகம் வலுவூட்டுகிறது. இங்கு தமிழ் மொழியுடன் தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன் முதலிய பல மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பல துறைகளில் சிறந்த நூல்கள் உள்ளன.
அப்போதைய அரசர்கள் பலர் நூல் களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயல்பட்டனர். அதில் தலைசிறந்தவர் இரண்டாம் சரபோஜி மன்னர். இவரது காலத்தில் மேலைநாட்டு மொழியிலான அச்சுப் புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்த நூலகம் 'சரபோஜி சரசுவதி மகால்' நூல்நிலையம் என்று வழங்கப்படுகிறது.
நூலகத்திற்கு வெளியே கிழக்கிந்தியக் கம் பெனியாரால் சரபோஜி மன்னரின் உருவச்சிலை அமைக் கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணி களையும், கலை ஆர்வலர்களையும் ஈர்க்கும் சிறப்புமிக்க அருங்காட்சியகமும் இந்த நூலகத்தில் அமைந்துள்ளது. அழகிய வண்ண ஓவியங்கள், தொன்மை வாய்ந்த சுவடிகள், மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய வாள், துப்பாக்கி, பல்லக்கு முதலிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஓலைச் சுவடிகள், காகிதச் சுவடிகள், அரிய நூல்கள், ஓவியங்கள் மற்றும் ஆவணங்கள் அழியாமல் பாதுகாக்க 'ரசாயன காப்பு பிரிவு' 1980-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.
ஏறத்தாழ 25 ஆயிரம் நூல்கள், 11 இந்திய மொழிகளில் உள்ளன. வரலாற்று புகழ்வாய்ந்த கையெழுத்து அஞ்சல் மடல்களும், 300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், கலிங்கத்துப்பரணி,
கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும் உள்ளன. அச்சேறாத அரிய சுவடி நூல்களும் ஏராளம் உள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள், உடற்கூறு, தாவரம் முதலிய துறைகளுக்குரிய பல நிறப்படங்களும், சிறந்த ஓவியங்களும் உள்ளன.
அரிய சுவடிகளைப் பதிப்பித்து அச்சு நூலாக்கி மக்களுக்கு பயன்பட செய்வதே சரசுவதி மகால் நூலகத்தின் முக்கிய நோக்கமாகும். பொக்கிஷத்தை பாதுகாப்போம்! புத்தகத்தை வாசிப்போம்! புதுமை செய்வோம்!








