தமிழ்நாட்டில் 150 தபால் நிலையங்கள் மூலம் தங்க சேமிப்பு பத்திரங்களில்
நாளை(வெள்ளிக்கிழமை) முதல் முதலீடு செய்யலாம் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தங்க சேமிப்பு பத்திரங்கள்
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக, தங்க சேமிப்பு பத்திரங்களை
வெளியிட்டு அதில் பொதுமக்களை முதலீடு செய்ய வைக்க மத்திய அரசு முடிவு
செய்து, கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தது.
அதன்படி,
அதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அந்தவகையில், ஒரு
கிராம் தங்க பத்திரங்களுக்கான விலையை நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி
நிர்ணயித்தது.
வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் தங்க சேமிப்பு
பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் 150 தபால் நிலையங்கள் மூலம் தங்க சேமிப்பு பத்திரங்களில்
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முதலீடு செய்யலாம் என்று அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தபால் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
நாளை முதல் முதலீடு செய்யலாம்
தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான திட்டத்தை இன்று
(வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். தமிழ்நாட்டில்
150 தபால் நிலையங்களில் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக விண்ணப்பங்கள் நாளை
(வெள்ளிக்கிழமை) முதல் அந்த 150 தபால் நிலையங்களிலும் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அப்போதே முதலீடு செய்ய தொடங்கலாம்.
தமிழ்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 150 தபால் நிலையங்களில் 92 தலைமை
தபால் நிலையங்களும், 58 கிளை தபால் நிலையங்களும் அடங்கும்.
சென்னை மண்டலத்தில்...
சென்னை மண்டலத்தை பொறுத்தவரையில், 20 தலைமை தபால் நிலையங்களும், 30
கிளை தபால் நிலையங்களும் என மொத்தம் 50 தபால் நிலையங்கள் மூலம் தங்க
சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
நாளை (வெள்ளிக்கிழமை)
முதல் 15 நாட்களுக்குள் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்ய
வேண்டும். முதலீடு செய்ததற்கான ரசீதை நாங்கள் வழங்குவோம். தங்க சேமிப்பு
பத்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி பின்னர் வழங்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.







