கம்பெனிகள் வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கம்பெனிகள் வரி
நாட்டில் கம்பெனிகள் வரியை அடுத்த 4 ஆண்டுகளில் 30 சதவீதத்தில்
இருந்து 25 சதவீதமாக குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடந்த
பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அதன்படி இதற்கான
நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது.
இந்த நிலையில் உலக
பொருளாதார மன்றம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த ‘இந்தியாவில் தேசிய உத்தி தினம்’ நிகழ்ச்சி நேற்று
டெல்லியில் நடந்தது. இதில் நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய நிதி மந்திரி
அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
குறைக்கப்படும்
கம்பெனிகள் வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது
தொடர்பாக, சில விதிவிலக்குகளை வழங்கி நேரடி வரிவிதிப்புக்கான நடைமுறைகளை
நான் அறிவித்து உள்ளேன். முதல் சுற்றில் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் இந்த
விதிவிலக்குகளை அடுத்த சில நாட்களில் பொதுமன்றத்தில் வைக்க உள்ளோம்.
அந்தவகையில் கம்பெனிகள் வரி குறைப்பு தொடர்பான முதல் பகுதி அறிவிப்பை வருகிற பட்ஜெட்டில் வெளியிட முடியும் என நான் நம்புகிறேன்.
சேவை வரி மசோதா
வரிகள் தொடர்பான பிரச்சினைகளை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள்
திட்டமிட்டு சீர்செய்து வருகிறோம். முன்தேதியிட்ட வரிவிதிப்பு தொடர்பான
பயம் போய்விட்டது. எனினும் சில சட்ட நடைமுறைகளால் இந்த பிரச்சினைகளில்
கணிசமான அளவு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
சரக்கு மற்றும் சேவை
வரிகள் மசோதா தொடர்பாக ஏற்பட்டுள்ள முடக்கம் காலவரையின்றி தொடராது. அந்த
மசோதா ஓட்டெடுப்புக்கு வரும்போது, அது நிறைவேறும்.
விவாதிக்க தயார்
சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதற்கு தேவையான சட்டங்கள்
நம்மிடம் தயாராக உள்ளன. தொழில்நுட்பத்துறையும் தயாராக இருக்கிறது. எனவே
மேல்–சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டதும் பெரும்பாலான மாநிலங்களின் ஆதரவுடன்
இதை அமல்படுத்த முடியும்.
இந்த மசோதா தொடர்பாக காங்கிரசுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.







