அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி மும்முரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூர் கல்வி மாவட்டங்களில்
மொத்தம் உள்ள 1,076 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 8,995 ஆசிரியர்களின்
சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.இப் பணியில்,
ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்து, ஆசிரியர் பணி பெற்றது தெரிய
வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் தமிழரசு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே, கதிரம்பள்ளியைச் சேர்ந்த ராஜா என்பவர்
அருள்சுந்தரம் என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, வேப்பனஹள்ளி அருகே
கோஜராஜபள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில், தலைமையாசிரியராகபணிபுரிந்து
வந்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த மாவட்ட கல்வித் துறை அதிகாõகள்
செவ்வாய்க்கிழமை அப் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர் இதையறிந்த
அருள்சுந்தரம் செவ்வாய்க்கிழமை முதல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து
அவர் மீது கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் துறையில் புகார்
அளித்தனர்.
இந்த நிலையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி சான்றிதழ்கள் கொடுத்து ஆசிரியர்கள்
பணிபுரிந்து வருகிறார்களா என்பதை அறியும் வகையில், மாவட்டம் முழுவதும் உள்ள
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என, 1,076 அரசுப்
பள்ளிகளில் பணிபுரியும் 8 ஆயிரத்து 995 ஆசிரியர்களின் சான்றிதழ்கள்
சரிபார்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய
இரண்டு நாள்கள் இப் பணியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு
தலைமையில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள்,
உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய
அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.இதன்படி, ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள நகராட்சி
நடுநிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது.
போலி சான்றிதழ்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிபுரிவது தெரிய வந்தால்,
அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்என, தமிழரசு ஒசூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்தூரில்...
மத்தூர்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஒன்றியத்தில் உள்ள அரசுப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின், கல்வி, ஆசிரியர் பட்டயப் படிப்பு,
சாதிச் சான்றிதழ்களை மத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.சுப்பிரமணி,
பி.மாதேஷ் ஆகியோர் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை
சரிபார்த்தனர்.