எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றமே 2013-இல் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது.
ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத் தேர்வு முறை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.
எனவே, நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும், அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரியம் என்பதாலும், நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக எதிர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ராமதாஸ்: 2012-ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013-ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று 2013-ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது. பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி தான் உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது.
எனவே, மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும்.
நுழைவுத் தேர்வு முடிவு கிராமப்புற மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.








