ஆதார் எண் இணைக்கும் பணிகளுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சி.பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், இது அலுவலகப் பணி போன்றதல்ல. ஆசிரியர்கள் வேலை நேரங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆதார் எண் குறித்த தகவல்களைச் சேகரித்து பணிகளை முடிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது என்றார்.
பின்னர், அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், பள்ளிப் பணி நேரங்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தவில்லை. இது கூடுதல் பணியாகவே வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் விடுமுறை நாள்களில் மட்டும் இதுபோன்ற பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று உறுதி அளித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.








