இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையில், காகித வழியில்
விண்ணப்பிக்கும் நடைமுறை முடிவுக்கு வருகிறது. இனி, 'ஆன்லைன்' வழியாக,
விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.
தமிழகத்தில்,
இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, காகித வழி
விண்ணப்ப நடைமுறை தான் அமலில் இருந்து வருகிறது. விண்ணப்பங்கள் வாங்க,
மையங்களுக்கு மாணவர்கள் அலைய வேண்டும். அதன்பின், சமர்ப்பிப்பதிலும் பல
சிக்கல்கள் இருந்தன. தற்போது, இந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.இனி,
இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கும்
நடைமுறை, இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
அண்ணா பல்கலை
இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., -
பி.ஆர்க்., போன்ற படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலை
துணைவேந்தர் ராஜாராம் தலைமையில், தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை
ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.வரும் கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை குறித்து, உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில், இரண்டாவது
ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், விண்ணப்ப வினியோகம்
குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டு, தேதி முடிவானது.
பின், அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் அளித்த பேட்டி:இந்தாண்டு முதல், இன்ஜி., சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம்
மட்டுமே விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். சென்ற ஆண்டே,
எம்.இ., மற்றும் பகுதிநேர, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு,
ஆன்லைனில்விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.ஏப்., 15ம் தேதி முதல்,
மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அனைத்து விவரங்களும்,
அதிகாரபூர்வ அறிவிப்பில், ஆன்லைனில் வெளியாகும். மாணவர் சேர்க்கை
கவுன்சிலிங் தேதி, பின் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும், 60
மையங்களில், ஆன்லைன் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்
கூறினார்.

இதேபோன்று,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கும், ஆன்லைன்
விண்ணப்ப முறையே பின்பற்றப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, மே, 2 முதல்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்
என, மருத்துவக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
விண்ணப்பிப்பது எப்படி?
* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
* ஏப்., 15 முதல், அண்ணா பல்கலை
இணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம்.
*
பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து, விண்ணப்ப கட்டணத்தை
வங்கியில் செலுத்தி, அதற்கான, டி.டி.,யுடன் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை
கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
* பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.
*
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, 10 நாட்களுக்குள்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்; அதன்பின் வரும்
விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
மே 2ல் பிளஸ் 2 'ரிசல்ட்':
பிளஸ்
2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல்
பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல் மாணவர்களுக்கு
பொருளியல் தேர்வும் நடக்கிறது. அத்துடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன.
மற்ற பிரிவு மாணவர்களுக்கு, மார்ச், 28ல் தேர்வுகள் முடிந்து விட்டன. மே
முதல் வாரத்தில் இருந்து, ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டி
உள்ளது.அதனால், ஏப்., 18க்குள் விடைத்தாள் திருத்தப்பட்டு, 20 முதல்,
25க்குள், மதிப்பெண் ஒருங்கிணைப்பு, கணினி வழி மதிப்பெண் சரிபார்த்தலும்
முடிக்கப்படும். ஏப்., 29 அல்லது மே, 2ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என,
தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.