பள்ளிக் கல்வித் துறையில் தன்னிச்சையாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த அலுவலகத்தில் ஆசிரியர்கள் பலர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள ராமனூத்து கிராமத்தில் செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளியை அரசுப் பள்ளியாக ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ஆணையை மீறி, தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தன்னிச்சையாக ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் பட்டியலுடன் இணைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்வதை கைவிடக் கோரியும், ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தலைமையாசிரியை பதவில் இருந்து விதிமுறைகளை மீறி பதவிஇறக்கம் செய்து இடைநிலை ஆசிரியையாக வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நடவடிக்கையைக் கண்டித்து, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலர் கிப்சன் தலைமையில் ஆசிரியர்கள் பரல் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் கல்வித் துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.








