உலக வானிலை தினத்தை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் கண்காட்சி, கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழக பருவ நிலை மாற்றம், ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஏ. ராமச்சந்திரன், அண்ணாப் பல்கலைக்கழக சுற்றுசூழல் துறை இயக்குநர் பேராசிரியர் எஸ்.கண்மணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் பேசியதாவது:
ஆனால், கடந்தாண்டு டிசம்பரில் 2 நாள்களிலேயே 75 சதவீதம் அளவுக்கு மழை பெய்துள்ளது. பருவ நிலை மாற்றத்துக்கு, ஆல மரத்தின் எண்ணிக்கை குறைந்ததும் ஒரு முக்கியக் காரணம். ஏனென்றால், ஆலமர விழுதில் இருந்து பிரிந்து, புதிதாக மரங்கள் வளரும். மேலும், தற்போது இருப்பவை எல்லாம் நமது முன்னோர்கள் காலத்து ஆலமரங்கள் தான்.
அதேபோல் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைந்து, ஈரப்பதம் குறைவானதும் கூட பருவநிலை மாற்றத்துக்கான காரணமாகும். இந்தியாவில் சிறப்பான வானிலை ஆய்வாளர்கள் உள்ளனர். அதே நேரத்தில், ஐரோப்பியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தரமான வானிலை முன் அறிவிப்புகள் இல்லை. எனவே, பள்ளி, கல்லூரிகளில் வானிலை பற்றிய படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும்.
மக்களிடையே இதுகுறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் நலனுக்காக நேர்த்தி, துல்லியம், தரமான வானிலை அறிவிப்பை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தென் மண்டல வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பாகுலேயன் தம்பி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்கள் எஸ்.ஆர். ரமணன், பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
ஆர்வத்துடன் பங்கேற்பு
காலையில் நடைபெற்ற கண்காட்சியில், சென்னை மாநகரிலுள்ள பல்வேறு தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வானிலை நிலவரங்களைக் கணிக்கும் பழைமையான, நவீன கருவிகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. வானிலையைக் கணிக்கும் முறை, கருவிகள் செயல்படும் விதம், தரவுகள் சேகரிக்கப்படும் விதம், துறைமுகம், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முறை போன்ற வானிலை சார்ந்த தகவல்களை உதவி வானிலை அதிகாரி மா.வே.குகன், கண்காட்சியைப் பார்வையிட வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழில் விரிவாக எடுத்துரைத்தார்.








