புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச 'வை - பை' வசதி, நாளை
தொடங்கப்படுகிறது.'டிஜிட்டல்' இந்தியா திட்டத்தின் கீழ், முக்கியமான ரயில்
நிலையங்களில், பயணிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்க, ரயில்வே முடிவு
செய்துள்ளது. இந்தப் பணி, ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான,
'ரயில்டெல்'லிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து,
ரயில் நிலையங்களில், இலவசமாக, 'வை - பை' வசதி வழங்கும் பணியை, 'ரயில்டெல்'
செய்து வருகிறது. மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான், முதன்முறையாக,
பயணிகளுக்கு இலவசமாக 'வை - பை' வசதி வழங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது
ரயில் நிலையமாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், இலவச 'வை -
பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும்,
இந்த வசதியை பயன்
படுத்தி கொள்ள முடியும். இதுபற்றி ரயில்வே அதிகாரி
ஒருவர் கூறியதாவது:நாடு முழுவதும், 400க்கும் அதிகமான ரயில் நிலையங்களில்,
'வை - பை' வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், பாட்னா,
ராஞ்சி, எர்ணாகுளம், அலஹாபாத், லக்னோ உட்பட, 10க்கும் அதிகமான ரயில்
நிலையங்களில், 'வை - பை' வசதி வழங்குவதற்கான சோதனை நடந்து வருகிறது. விரைவில், இந்த ரயில் நிலையங்களில், 'வை-பை' வசதி முழுமையாக தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், 100 ரயில் நிலையங்களில், 'வை - பை' வசதி செய்து தரவும்,
ரயிலவே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறினார்.







