சென்னை, அண்ணா பல்கலையின் துணைவேந்தர் ராஜாராமின் பதவிக்காலம், நேற்று
முன்தினத்துடன் முடிந்ததால், புதிய துணைவேந்தர் பதவிக்கு பலரும் போட்டி
போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் துணைவேந்தராக இருந்த
மன்னர் ஜவஹர் ஓய்வு பெற்றதும், 2013 மே, 26ல், புதிய துணைவேந்தராக, தேனி
மாவட்டத்தைச் சேர்ந்த, ராஜாராம் பொறுப்பேற்றார். சென்னை மண்டல அண்ணா
பல்கலை துணைவேந்தராக இருந்த இவர், அனைத்து மண்டல அலுவலகங்களும்
இணைக்கப்பட்ட பின், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை துணைவேந்தரானார்.
பதவிக்காலத்தில்
பல புதிய பாடப்பிரிவுகளை கொண்டு வந்த இவர், இடைவிடாத முயற்சியால்,
பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் சீர்மிகு பல்கலை அந்தஸ்தை, அண்ணா
பல்கலைக்கு பெற்றுக் கொடுத்தார். ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மூலம் அண்ணா
பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார்.
இவரது
பதவிக்காலம், நேற்று முடிந்தது. பல்கலை பதிவாளர் கணேசன், கிண்டி இன்ஜி.,
கல்லுாரி முதல்வர் நாராயணசாமி, அழகப்பா செட்டியார் காலேஜ் ஆப் டெக்னாலஜி
கல்லுாரி முதல்வர் சிவநேசன் மற்றும் பேராசிரியர்கள், துணைவேந்தருக்கு
பிரியாவிடை அளித்தனர்.
இதையடுத்து, புதிய துணைவேந்தர் யார் என்ற
கேள்வி எழுந்துள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசு
சார்பில் இன்னும் தேடல் குழு அமைக்கப்படவில்லை. தேடல் குழு அமைக்கப்பட்டு,
புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக துணைவேந்தராக மூத்த
பேராசிரியர், ஒருவர் நியமிக்கப்படலாம்.
ஆனால், இதற்கான விதிகள்
ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதால், தற்காலிக துணைவேந்தர் நியமிப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. அதனால், உயர்கல்வி துறை செயலர் அபூர்வா தலைமையில்,
ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால், ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி
தலைமையில் இயங்க, பேராசிரியர்கள் பலர் விரும்பவில்லை என, கூறப்படுகிறது.
இதற்கிடையில்,
புதிய துணைவேந்தர் பதவிக்கு பல மட்டத்திலும் கடும் போட்டி நிலவுகிறது.
அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் நாராயணசாமி,
கனிமத்துறை பேராசிரியர் சங்கரன் மற்றும், 'மல்டி மீடியா' கல்வி ஆராய்ச்சி
மைய இயக்குனர் கவுரி ஆகியோர் இந்த போட்டியில் உள்ளதாக, உயர்கல்வி துறை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







