போலி சான்றிதழ் கொடுத்து, பணியில்
சேர்ந்த வழக்கில் ஆசிரியைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து அரியலூர்
நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
அரியலூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தனபால் மனைவி
ராஜாமணி (36). இவர் கடந்த, 2000-ஆம் ஆண்டு மணக்கால் ஆதிதிராவிடர் தொடக்கப்
பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
அப்போது, ராஜாமணி அளித்த சான்றிதழ்களை அரியலுôர்
ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் துரை சரிபார்த்தபோது, அவை போலியானவை
என்றும், போலி கல்விச் சான்றிதழ்களை கொடுத்து அவர் பணியில்
சேர்ந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அரியலூர் ஆதிதிராவிடர் நல தனி
வட்டாட்சியர் துரை அளித்த புகாரின் பேரில், அரியலூர் போலீஸார் வழக்குப்
பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை அரியலூர் குற்றவியல்
நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பளித்தார்.
அதில், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக, ராஜாமணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அவர் தீர்ப்பளித்தார்.